கோழி ஏக்கம்!

கோழித் தூக்கம் தெரியும். ஆனால் இது என்ன “கோழி ஏக்கம்?” இப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால் ஒரு கோழி அதை எனக்குப் புரிய வைத்த கதைதான் இன்றைய பகிர்வு!

வழக்கம் போல் தோட்டத்தில் செடிகளுடன் பேசிக் கொண்டு(!) தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த சமயம், யாரோ பின்னால் இருந்து அழைத்தார்கள்! திரும்பிப் பார்த்தால் ஒருவரும் இல்லை. சரி, ஏதோ பிரமை என்று என் செயலில் தொடர்ந்தேன். மறுபடி அதே குரல்! திரும்பினால் யாருமே இல்லை. ஒரு நொடி உடம்பெல்லாம் ஒரு ஜிலீர்…. மனதுக்குள் ஒரு பயம்!  ‘இத்தனை வருடங்கள் எங்கெங்கோ இருந்துள்ளோம். இப்போது என்ன திடீர் பயம் ” என்று என்னை நானே தைரியப் படுத்திக் கொண்டேன். நன்கு சுற்றும் முற்றும் பார்த்தேன். மதில் சுவர் மீது ஒரு கோழி மட்டும் இருந்தது. என்னையே பார்த்துக்கொண்டும் இருந்தது!

( இனி வருவது உரையாடல் நடையாக இருந்தால் நன்கு இருக்கும் என்று எண்ணியதால் ஒரு சிறு முயற்சி. பார்க்கலாமா?)                   *************************************

நான் : அட நீதானா அந்தக் குயில்? (அது கோழியோ குயிலோ, எனக்கு நான்  குயில் என்ற ஒரு உணர்வு!! )

கோழி : (வேகமாக) கொக் கொக் கொக் கொக்….

( ஏதோ தலையை ஆட்டி, காலைத் தூக்கிப் பிடித்து சுற்றிக் குதித்தது. ஆஹா என்ன ஆச்சர்யம். கொக் கொக் அர்த்தம் புரிய ஆரம்பித்து விட்டது! இனிமேல் No கொக் கொக்..  straight dialogues. Ok?)

மேலே சொன்ன கொக் கொக் கொக் – கிற்கு இதுதான் பொருள் – “என்ன புரியவில்லையா? கொஞ்சம் இரு. என் பாஷையைப் புரிந்து கொள்ளும் சக்தியைக் கொடுக்கிறேன்!”

நான் : வாவ்! என்னே பாக்யம்! சரி சரி சொல்.

கோழி : உனக்கு கோழிக்கும் குயிலுக்கும் வித்தியாசம் தெரியலே! படிக்கும்போது ஒழுங்காப் படம் பார்த்துப் படிக்கவில்லையா?

நான் : (மனதுக்குள் இது கொஞ்சம் வில்லங்கமான கோழி போல இருக்கே) அப்படி இல்லை. உன் குரலைப் பாராட்டி ஒரு பாட்டு!

கோழி: இதுதான் மனிதர்களின் பலவீனம். ஏதாவது இல்லாத ஒன்றைச் சொல்வது, பிறகு கேட்டால் நான் சொன்னது கவிதை என்பது…. இப்படியே எத்தனை நாள்தான் இருப்பீர்கள்?

நான்: என்னம்மா, ஏதோ குறை சொல்லிகிட்டே இருக்கே. கொஞ்சம் வந்த விஷயத்துக்கு வா. என்னை எதுக்கு கூப்பிட்டே?

கோழி: ஓ அதுவா? உன் தோட்டத்தில் நானும் இருக்கேன். ஆனால் என்னை நீ கண்டுக்கவே இல்லையே? ஒற்றைக்கால் காக்கா மட்டும் தெரிகிறது! அதைப் பற்றி எழுதுகிறாய். என்னைப் பற்றியும் ஏதாவது எழுது!

நான்: அடடா.. உன்னை நான் கவனிக்கவே இல்லை. அது மட்டும் இல்லை. உன்னைப் பற்றி எழுத என்ன இருக்கு?

கோழி: கவனித்தால் தானே தெரியும். சரி இன்று கவனி. பிறகு எழுது! இதுவே என் கட்டளை! என் கட்டளையே சாசனம்!

(ஆஹா பாகுபலி சிவகாமி தேவி அவதாரம் எடுத்து விட்டது)

நான்: உத்திரவு தேவி!                               *************************************

எப்படி ஒரு நாடகம் பார்த்தீர்களா? என்ன செய்வது எல்லாம் கோள் படுத்தும்பாடு! சரி,  இதையும் பார்க்கலாம் என்று பார்த்தேன், ரசித்தேன், வியந்தேன்!

அப்போது நேரம் சரியாக மாலை 6 மணி. பின்னால் இருக்கும் வீட்டின் மதில் சுவரில் கோழி நின்று கொண்டு என்னைப் பார்த்து, தலையை முன்னும் பின்னும் ஆட்டி வரவேற்றது. நான் பார்ப்பதை உறுதி செய்து கொண்ட பின் தன் அழகான இரண்டு கால்களால் ஒரே நேர்கோட்டில்  நடந்தது. அழகிப் போட்டியில் நடப்பது போலவே இருந்தது.  (பின் எதற்கு அந்த நடைக்கு 🐈 walk என்று பெயர் வைத்தார்கள் என்று புரியவில்லை) பக்கத்து வீட்டு மதில் சுவற்றின் தூணில் ஒரு jump. அப்படியே ஒரு about turn. பிறகு ஆசுவாசப் படுத்திக் கொண்டு, அடுத்த உயரமான இலக்கை நிமிர்ந்து பார்த்தது.  உயரத்தை உறுதி செய்தவுடன், காலை அழுத்தி முழு  உடம்பாலும் உட்கார்ந்து, தன் பலத்தை உபயோகித்து, கொக் கொக் கொக்…. என்று இறக்கைகளை அடித்துக் கொண்டு ஒற்றைக் கம்பின் உச்சியான தன் இலக்கில் perfect landing. இப்போது என்னைப் பார்த்து ஒரு கொக் கொக் கொக்… ஆனால் வேறு த்வனி. என்ன சொன்னது தெரியுமா? “ஒற்றைக்கால் காகம் அகலமான பகுதியில் land ஆனதற்கு அவ்வளவு விமர்சனம் செய்தாயே. ஒற்றைக் கம்பின் உச்சியில் land ஆவதை விட அது கஷ்டமா?”  என்ன செய்வது? கன்னத்தில் போட்டுக் கொண்டேன். உண்மையும் அதுதான் என்றும் புரிந்தது. அடுத்ததாக அதே கால் ஊன்றி, ஒரு கொக் கொக் கொக் கொக் கொக்…. இம்முறை final step. நம் வீட்டு வேப்ப மரத்தில் உள்ள வலுவான கிளையில் settle ஆனது. கிளையின் ஆட்டம் மட்டுப் பட்டவுடன், பெரிதாக கொகரகொக், கொகரகொக், கொகரகொக் என்று அலை  அலையாக சப்தம் செய்தது. அதன் விளைவு, கீழே இருந்து அதன் இணை, சேவல், கொக்கரக்கோ என்று பெரிதாக கூவிக் கொண்டே ஒரே பறப்பில், கோழி இருந்த கிளைக்குத் தாவியது. அற்புதம்! இதை இத்தனை நாட்கள் கவனிக்கவில்லையே என்று நானும் வருத்தமும் அடைந்தேன்.  நம்மைச் சுற்றி எத்தனை அற்புதங்கள்! கோழியும் என்னைப் பார்த்து “கொக் கொக் ” என்றது. அதாவது “good night ஆனால் என்னைப் பற்றி எழுத மறந்து விடாதே” என்ற கட்டளையும் இட்டது. அன்றிலிருந்து தினமும் மாலை கோழி கவனம் வாடிக்கையாகிவிட்டது. 

பாடம் : புவனாவின் (அத்தை பேத்தி) “அவரும் நானும் ” பதிவில் சிலாகித்து கூறப்பட்டிருந்த ‘ புரிதல் ‘ இங்கும் பிரதானமாக இருந்ததை உணர முடிந்தது. பகல் முழுவதும், எங்கே சென்றாலும், மாலையில் சரியான வேளையில் இருப்பிடம் வந்து சேரும் கோழியின் குணம், பத்திரமாக வந்து விட்டேன் என்று பாங்காகத் தெரிவிக்கும் பண்பு, இவைகளை உறுதி செய்து கொண்ட பின்னர் தானும் வந்து சேர்ந்து கொள்ளும் கடமை உணர்வு நிறைந்த சேவலின் ஆண்மையும் போற்றப் பட வேண்டியவை மட்டுமல்ல,  அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!

கோழி கிறுக்கல், கோழித் தூக்கம் – இப்படி மட்டுமே அறிந்திருந்த எனக்கு, கோழி ஏக்கம், புரிந்தபின் அதுவே என்னைச் சுற்றி உள்ளவைகளை கவனிப்பதற்கு ஊக்கமாகவும் ஆயிற்று!

இதைப் படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் உங்கள் பகுதியில் ஏதாவது ஒரு கோழியைப் பார்க்க நேரிட்டால், நீங்களும் ரசித்து, அவைகளிடம் நான் கற்றுக் கொண்ட கோழிப் பாடம் பற்றிக் கூறுங்கள்.

எனக்குப் பாடம் புகட்டிய கோழி!
கோழியின் இணை!

3 Comments

  1. Adhi Venkat says:

    கோழி எங்கள் கவனத்தையும் ஈர்த்தது!

    அழகான நடை இப்போது கோழியை அல்ல உங்கள் எழுத்து நடையைச் சொன்னேன்!

    இனி கோழியைப் பார்க்கும் போது உங்கள் நினைவும் வரும்.

    Like

  2. கோழியின் ஏக்கம் குறித்த தங்களது எண்ணத்தில் உதித்த சிந்தனைகள் வெகு சிறப்பு. தொடரட்டும் உங்களுடைய சிந்தனையும் பதிவுகளும்.

    Like

    1. Lalitha says:

      நன்றி! தங்களின் ஊக்கம் என்னை மென்மேலும் செயல்படுத்தச் செய்யும்!

      Like

Leave a Comment