அர்த நாரீஷ்வர நாள் 08.03.2024

வேதநாயகனின் பாதியாகி, யாதுமாகி நிற்பவள்!
சோதனைகளைச் சாதனைகளாக்க ஆதரவாய் இருப்பவள்!
காதலித்துக் கரம் பிடித்த மாதொரு பாகனின் மகத்தான நாளின்றும் தோதென இணைந்து அருள்பவள்!
மாதவன் சோதரி மாதவள் பாதங்களைப் பணிந்தே போற்றுவோம்!

இந்த ஆண்டு மகளிர் தினத்தில், சிவராத்திரியும் இணைந்தது சிறப்பே!

ஸ்வாசமே வாசமே!

கடற்கரை ஓரம் காற்று வாங்கப் போய், கடும் சளியை வாங்கி வந்தேன்.

நாசிகா மண்டலம் தாழ்வு மண்டலப் பகுதியாக மாறி, அமிர்தவர்ஷினி ராகம் வாசிக்கப் பட்ட பிராந்தியம் ஆகி விட்டது. மூக்கு, குற்றாலமாக மாறி விட்டது. விளைவு, வாய், வாயு தேவனின் வாசஸ்தலமாக மாறி, ஆரோஹனம், அவரோஹணம் என ஸ்வர சஹித உறக்கம். இரவு முழுதும் அழுது, என் இரண்டு கண்ணும் பழுது என்பது, காலையில், கண்ணாடியில் தெரிந்தது. மேலும், பரிசாக, தொண்டையில் ஒரே கரகரப்ரியா சஞ்சாரம். மார்கழி மஹோத்சவம், ‘தை ‘- யிலும் தொடர்வது போல, பகலில், இல்ல சபாவில், கம்பீர நாட்டையில் பேசிப் பேசி இரண்டாவது குரல் எல்லோரின் விமர்சனத்துக்கும் ஆளானது. சம்பாவனையாக, ஆளுக்கு ஒரு வைத்தியம்.

இதையெல்லாம் தாண்டி, –
என்று தணியும் இந்த இருமலின் வேகம் – , என்று பேரனின் கேலிப் பாடல் சிரிப்பை வரவழைக்க, நான், அனைவருக்கும் பேசு பொருள், பாடுபொருள் என்றாகி விட்டேன் என்பது புரிந்தது.
“இது என்ன மாயம், எதுவரை போகும் ” – என்று எனக்கு நானே பாடிப் பார்த்துக் கொண்டேன். இன்றாவது, நித்ரா தேவி துணைக்கு வருவாளா என்ற கேள்விக் குறியுடன், சயன சௌஹர்யாவில் பிரவேசம் செய்கிறேன்.

வருக வருகவே 2024

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்!

2023 இன் இறுதி நாளில் நன்றியாகவும், 2024 இன் தொடக்கத்திற்கு நல்ல முகவரியாகவும், நல்லதொரு அனுபவம் கிட்டியது.

பொங்கல் நாட்களில், கோவையில் குமாரி ஸ்பூர்த்தி – யின் நிகழ்ச்சி இருப்பதைப் அறிந்து, ‘ அடடா கோவையில் இப்போது இல்லையே ‘ என்று ஆதங்கப் பட்டேன். ஆனால் கடவுள் மிகவும் கருணை உள்ளவர் என்று புரிய வைத்தார். இன்று எதிர்பாராத விதமாக, பாண்டியில், அவரது நிகழ்ச்சி நடக்கிறது என்று தெரிய வந்ததால் நாங்கள் சென்று அனுபவித்து வந்தோம். ‘ குமாரி ‘ என்று அழைக்கப் பட்டாலும் இன்னும் குழந்தைதான். ஆனாலும் அசாத்தியமான திறமை. எல்லாம் கடவுளின் கருணை. சங்கீதம் கற்றுக் கொண்டுதான் பாடுகிறார் என்றாலும், பாடுகின்ற தருணங்களில் தெய்வீகம் புரிகிறது. ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ் என்று பாராட்டி ரசிக்கும் தருணங்கள் இயல்பானவை. ஆனால், தான் பாட வேண்டிய பாடல்கள் அனைத்தையும் காதுக்கு விருந்தாகவும், மனதிற்கு மருந்தாகவும் பரிமாறினார். 2 மணி நேரம் ஒரு தியான நிலையில் இருப்பது போன்ற உணர்வு.
விநாயகர் வந்தனத்தில் ஆரம்பித்து, – மொழிக்கு ஒன்று – என, பல பாடல்களை, பழரசமாய்ப் பரிமாறினார். இடையில் நேயர் விருப்பமாகக் கேட்ட 2 பாடல்களையும் பாடினார்.

இறுதிப் பாடலாக, – மைத்ரீம் பஜத,- பாடலை ஆரம்பித்த உடன் மனம் உருக ஆரம்பித்ததை உணர முடிந்தது. அதிலும்
युद्धं त्यजत स्पर्धां त्यजत
त्यजत परेषु अक्रममाक्रमणम्
என்ற வரிகளை, நெகிழ்ந்த குரலில் பாடிய போது உண்மையில் நெஞ்சு கனத்தது.
அப்படிப்பட்ட அமைதியான சூழலைத்தானே அனைவரும் வேண்டுகிறோம், தேடுகிறோம். இந்தப் பிஞ்சுக் குரலின் வேண்டுதலுக்காகவாவது இந்த நிலை ஏற்பட வேண்டும்.

அப்படி உருகி உருகி வேண்டிய அந்தக் குரல், கடைசி வரிகளான –
श्रेयो भूयात् सकलजनानाम् என்று 3 முறை பாடும்போது, எங்கிருந்து அந்த வீரம் வந்தது என்றே புரியவில்லை.
सर्वे जना सुखिनो भवन्तु என்ற கொள்கையைக் கொண்டாடும் பாரத தேசம், நம் தேசம் என்று உணரும்போது பெருமையாகவும் உள்ளது.

பாடகருக்கு மரியாதை செய்வது என்ற வகையில், விளம்பரத்திற்கு பேர் போன பாண்டி மக்கள், ஆளுயர மாலை அணிவித்தனர். சிறு குழந்தை போல அதை 2 கைகளாலும் பிடித்துக் கொண்டு, மேடை முழுவதும் யானைக்குட்டி நடப்பது போல ஆடி ஆடி நடந்ததைப் பார்த்தபோது, பேபி ஸ்பூர்த்தி – யைக் காண முடிந்தது.

மொத்தத்தில், இன்று கிடைத்த அனுபவம், 2024-க்கான வாழ்த்து எனவும் புரிந்தது.

ராமபிரானின், ஜன்ம பூமியில், கோலாகலமாக இந்த ஆண்டு மீண்டும் அவதாரம் நடக்க உள்ளது. இந்த விஸ்வரூப வெற்றியால், பாரதம் விஸ்வத்திற்கு, ஒரு விலாசமாக அமையும்.

वन्दे भारत्! वन्दे मातरम्!

மார்கழியில் சில பார்வைகள்!

புள்ளின் வாய்க் கீண்டானை, – என்பது பகாசுரனைக் குறிப்பது புரிகிறது. ஆனால், அதென்ன, பொல்லா அரக்கனை – என்ற அடைமொழியுடன் கூடிய பதம், இராவணனைக் குறிக்க பயன் படுத்தப் பட்டுள்ளது? அரக்கன் என்றாலே பொல்லாதவன்தானே? பின் எதற்கு அந்தப் பிரயோகம்? அங்குதான் ஆண்டாளின், மொழியருமை தெரிகிறது. அதே கால கட்டத்தில், விபீஷணன் என்ற ஒரு நல்ல அரக்கனும் இருந்ததால், இராவணனை, ‘ ‘பொல்லா ‘ என்ற அடைமொழியுடன் விளக்கி உள்ளாள். அது மட்டுமல்ல, தன் வயதுக்கே உரித்தான விளையாட்டு மொழியில், இராவணனை – கிள்ளிக் களைந்தானை என்று இராமனையும் கொண்டாடுகிறாள்.

அடுத்ததாக, மாதவனைப் பாடித் துதிக்க வேண்டிய நேரத்தில், உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை, போதரிக் கண்ணினாய் என்று அழைக்கிறாள். போது என்றால், தாமரை மலர் என்று பொருள்படும். அத்தகைய தாமரை மலர் போன்ற கண்களை உடைய பெண்ணே, இந்த அழகிய கண்களால், அந்த மாயக் கண்ணனைப் பாராமல் உறங்குதல் முறையா என்று சாடுவதோடு, உறங்குவது போன்ற கள்ளத் தனத்தை விடுத்து, குளிர்ந்த நீரில் நீராட வா என்றும் அழைக்கிறாள். இதில் நீராட என்னும் உபயோகம், கண்ணனைப் போற்றும் நாம சங்கீர்த்தனத்தில் திளைக்க அழைப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

ஆண்டாளின் காலத்தை நிர்ணயிக்க, முதல் மற்றும் ஏழாம் பாசுரங்களோடு, இந்தப் பாசுரமும் உதவுவதாகவும் செய்தி உண்டு.

பக்தி, மொழி, அறிவியல், எளிமை என்பன போன்ற பன்முக விளக்கங்களை எளிதாக விளக்கும், ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையை, இந்த 30 நாட்கள் மட்டுமன்றி, 365/366 நாட்களும் பாடினால், இன்னும் எத்தனையோ அற்புதங்களை அறியலாம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – பாரதி பிறந்தநாள்!

நாமகள் அருளாலே நயமான சொல்லெடுத்துப்
பாமாலை பலவியற்றி பலராலும் பாடிமகிழ்
பூவுக்குள் தேனாகப் புவியுளோர் அருந்தியே
கோமகனைக் கொண்டாடவோர் குதூகலத் திருநாள்!

நரிபோல நுழைந்து நம்நாட்டை ஆண்டவனைப்
பரிவேக முழக்கப் பாடல்களால் பலரோடும்
அரிபோல் முழங்கியே அதிர்வடையச் செய்தவன்
கரிமூலம் காலனின் கணக்குக்கு இரையானவன்!

கண்ணனைக் கொண்டாடிய கண்ணம்மாவின் காதலன்
அண்ணலுக்குக்கும் அதிகார அழைப்பு விடுத்தவன்
தண்ணிலவுக் கதிராகித் தகைசால் தரணியுளோர்
எண்ணத்தில் இமயமென என்றென்றும் உயர்ந்தவன்!

மெல்லத் தமிழினிச் சாகும் என்றவனை
வில்லடிபோல வீரம்புகளால் விரட்டும் வித்தையால்
சொல்லடி கொடுத்துச் சோர்வுறச் செய்தவன்
பல்லுயிரும் போற்றியே வணங்கும் பாரதி….
நீ என்றும் எங்கள் பாரதத் தீ!🔥

இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – காலடி தரிசனம்

மஹான் ஆதி சங்கரர் அவதரித்த புண்ணிய பூமியான, காலடிக்கு வரும் பாக்கியம் இன்று கிட்டியுள்ளது. எங்கள் பெரியப்பா மகனுக்கு, அங்கு சிருங்கேரி மடத்தில் வைத்து, பீமரத சாந்தி இன்றும் நாளையும் நடக்கிறது. மிகவும் அருமையான நொடிகளாக அனுபவிக்க முடிகிறது. மிகவும்
ரம்யமான சூழ்நிலை. வணிக ரீதியில் இல்லாமல், ஆத்மார்த்தமாக செய்து கொடுக்கிறார்கள். சங்கரருடைய,
எத்தனையோ பாடல்களும், ஸ்லோகங்களும் இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த நிர்வாண ஷதகமும், மாத்ரு பஞ்சகமும், அவருடைய சன்னதியில் படித்து ஆனந்தம் அடைந்த கணம், விவரிக்க முடியாத நிலையைத் தந்தது. வழக்கம் போல அனைவர் நலன் வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டேன். இதைப் பகிர்வதன் மூலம், நீங்களும் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்.

இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கார்த்திகை திருநாள்!

கார்த்திகை நட்சத்திரம், கந்தனுக்கு உகந்தது

அக்னி ஸ்வரூபத்தில் அண்ணாமலையான சிவனுக்கு உகந்தது!

அர்த நாரியாய் அண்ணலுடன் கலந்த அன்னைக்கு உகந்தது

இம்மூவருக்கும் உகந்தது என்றால், முழு முதற்கடவுள் முந்தி விநாயகனுக்கும் உகந்ததுதானே!

இத்தகைய இனிய திருநாளில் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் !

மாந்தளிர் அழகுடன் மாணிக்க ஒளியுடன்
பூந்துகில் உடையுடுத்தி பூதங்களுள் ஒன்றான
வேந்தன் என்றாகிநல் வேதங்கள் முழங்கிட
சாந்தம் நிறைபுவியாக்கி சரித்திரம் படைத்திடுவோம்

இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கந்த சஷ்டி விழா – திருச்செந்தூர்

இன்று கந்த சஷ்டி. மாலை சூர ஸம்ஹாரம்.
தலையலையில் செந்தூர் தரிசனம்.
மனித நம்பிக்கையின் உச்சம் பக்தி.
ஆறுமுகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி, குமரன் இருக்கும் அனைத்து இடங்களிலும் கோலாகலம்.

நாம் கேட்பதெல்லாம் அளிப்பதோடு, அவன் கருணை உள்ளத்துடன் நமக்குத் தெரியாத நம் தேவைகளையும் பூர்த்தி செய்வான்

நாமும் இருக்கும் இடத்திலேயே அரோகரா கோஷம் எழுப்பி அவன்தாள் பணிவோம்.

மலைக்குற மகளை மணந்த
அலைகடல் அருகன்
சிலையெனை மட்டுமே இல்லாது
விலையிலா வரமளித்து வாழ்த்திடுவான்!

இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கந்த சஷ்டி விழா – சிக்கல்

சஷ்டி விழாவின் 5 ம் நாள்.

சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சம்ஹாரம் என்பது வழக்கு.

வசிஷ்டர் வெண்ணையால் பிரதிஷ்டை செய்த லிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டதால், இந்த ஊருக்கு சிக்கல் என்று பெயர் வந்ததாகக் கூறப் படுகிறது. நவநீத (வெண்ணெய்) ஈஸ்வரன் என்றும் வேல் நெடுங்கன்னி என்றும் அம்மையப்பனைக் கொண்ட அழகுக் குமரன் இங்கு சிங்காரவேலன் என்று அழைக்கப் படுகிறான். சூரனை ஸம்ஹாரம் செய்வதற்காக, அன்னை தன் சக்தியை வேல் வடிவில் வழங்கியதால், வேல் நெடுங்கன்னி எனவும், அதை வாங்கிய முருகன் சிங்காரவேலன் எனவும் அழைக்கப் படுகின்றனர்.

தாய் தந்தை இருவருக்கும் இடையில் அமர்ந்திருக்கும் கோலத்தில் தரிசனம் செய்யும்போது “முருகனை வணங்க வந்து மூவரையும் வழிபடும் பாக்யம் ” கிடைக்கும்.

இன்றைய நாளின் பெருமைக்குரிய சிக்கல் சிங்கார வேலனை, வணங்குவோம்.

இணைப்பில் விடுபட்ட சில பதிவுகள் – கந்த சஷ்டி விழா – திருவேரகம்

இன்று சஷ்டி விழாவின் 4 – ம் நாள், வியாழக்கிழமையில் வந்துள்ளதால், முருகன் குருவாக உருவெடுத்த தலமாகிய, திருவேரகம் எனப்படும் சுவாமிமலை குறித்த திருப்புகழைக் கேட்டு மகிழ்வோம்.

தந்தையே ஆனாலும், குருவின் முன் எப்படிப் பணிதலுடன் கற்க வேண்டும் என்னும் ஞானத்தைக் கற்பித்த பாக்கியம் பெற்ற தலம்.
அதனால் கந்தனுக்கு, தகப்பன் சாமி என்ற பெயரும் உண்டு.
அறுபடை வீடுகளில் 4- வது தலம்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப, சிறிய குன்று போல அமைக்கப்பட்ட இக்கோவிலில் உள்ள 60 படிகளிலும் 60 ஆண்டுகளின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.

திருப்புகழ், நமது சொந்த முயற்சியில், முதன் முறையாகப் படிக்கும்போது மிகவும் கரடு முரடாகத் தோன்றும். ஆனால், பதங்களைச் சரியாகப் பிரித்து பொருள் உணர்ந்து அனுபவித்தால், உள்ளம் உருகுவதை நம் கண்கள் கசிந்து காட்டும். அது பண்ருட்டி பலாப்பழம் போல உள்ளிருக்கும் சுவையை உணர்த்தும்.

உதாரணமாக, முதுமாமறை என்று வேதத்துக்கு அடைமொழி சொல்லி, வேதம் எத்துணை பழமையானது என்பதை உணரும்போது நம்மையும் அறியாமல் ஆஹா என்று கூவாமல் இருக்க முடியாது.

இத்தனை பெருமைகளோடு உள்ள, இப்பதிகத்தை மனமுருகிப் பாடி வேண்டினால், புத்திர பாக்யம் கிட்டும் என்பதும் உண்மை. நம் குழுவினர் இல்லங்களிலும், குழலையும் யாழையும் தோற்கடிக்கும் தேமதுர மழலை கேட்க,

உருவாய் அருவாய்
உளதாய் இலதாய்
மருவாய் மலராய்
மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க்
கதியாய் விதியாய்
குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே!

என வேண்டுகிறேன்! 🙏🙏🙏🙏🙏🙏